astrology dinamani
இசைத்துறையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்?
2018/06/30

இசைத்துறையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்?

இசை என்பது ஜாதி, மதம், மொழி, இனம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. இசை பொழுது போக்கு சாதனம் மட்டுமன்றி கவலை மற்றும் நோய் தீர்க்கும் அரு மருந்தாகவும் செயல்படுகிறது.

இசைக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு:

ஜோதிடத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இணைத்துப் பார்க்கின்றனர். நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியைக் கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதைக் கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.

நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனதிற்குப் பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம் அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன் என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாறு ஒப்பிடுகின்றனர்

கன்னி ராசி – சுத்த ரிஷபம்

துலா ராசி –  சதுஸ்ருதி ரிஷபம்

விருச்சிக ராசி – சாதாரண காந்தாரம்

தனுசு ராசி – அந்தர காந்தாரம்

மிதுன ராசி – காகளி நிஷாதம்

ரிஷபராசி – கைசிக நிஷாதம்

மேஷ ராசி – சதுஸ்ருதி தேவதம்

மீன ராசி – சுத்த தேவதம்

மகர ராசி – சுத்த மத்யமம்

கும்ப ராசி – ப்ரதி மத்யமம்

மழைக்கும் காரண கிரகம் சுக்கிரனை. அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையைக் கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள். மார்கழி மாதத்தில் விடியலில் பாடும் திருப்பாவையில் நான்காம் பாசுரமாக வரும் “ஆழி மழைக்கண்ணா” எனத்தொடங்கும் பாசுரத்தை அமிர்தவர்ஷினி அல்லது மேக ரஞ்சனி ராகத்தில் பக்தியுடன் பாட மழை வர்ஷிக்கும் என்பது நிதர்சனம்.

எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர், அமிர்த வர்ஷினி ராகத்தில் “ஆனந்த அம்ருதகர்ஷினி” என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது என்பது செவிவழிச்செய்தியாகும்.

ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையைக் குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.

இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு, சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரண பேச்சிற்கு வாக்கு ஸ்தான பலமும் புத பலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம். பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரைக் கலைத்துறையில் பிரபலமடையச் செய்யும்.

இசையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்பு

சரஸ்வதி யோகம்

தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் மற்றுமல்லாது இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ச்சி, தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது சரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள் அம்பிகையின் சந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

மாளவியா யோகம்:

சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் அமர்ந்து அந்த வீடுகள் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர வீடுகளாக (1,4,7,10) அமைந்திருந்தால் பஞ்ச மகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் சிறந்த யோகமான மாளவியா யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் இசைத்துறையில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெறுவதோடு சுக வாழ்வு, அழகான மனைவி, செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆடை, ஆபரணங்கள், பெண்களால் அனுகூலம் போன்ற அனைத்து சிறப்புகளையும் பெற்று விளங்குவார்கள்.

இசைத்துறையில் சிறந்து விளங்க பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறும் கிரஹ அமைப்புகள்:

1. ஜெனரஞ்சக சுக்கிரனின் ராசிகளான ரிஷபம் மற்றும் துலா ராசிகளை லக்னம், ராசி அல்லது வாக்கு ஸ்தானமாக கொண்டிருப்பது.

2. லக்னத்திலோ, ராசியிலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ சுக்கிரனை கொண்டிருப்பது.

3. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

4. மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகத்தைப் பெற்று புதனுடன் தொடர்பு கொண்டிருப்பது.

5. மிதுனம்/கன்னியில் புதன் நின்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகத்தில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் நிற்பது.

6. மீன லக்னமாகி நான்காம் வீடு மிதுனமாகி சுக்கிரன் திக் பலம் சுப பலம் பெற்று நிற்பது.

சங்கீதத்தில் புகழ்பெற வணங்கவேண்டிய பரிகார ஸ்தலங்கள்:

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கி வருவது சங்கீத துறையில் ஒருவரைப் பிரபலமடைய செய்யும்.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் சங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது சரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள் அம்பிகையின் சந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’ வாசிக்கிறாள் என்று ஆதிசங்கர பகவத் பாதாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

சங்கீதத்தில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும். இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும். இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.  மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும், சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடையச் செய்யும்.

– .௮ஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

Whatsapp- 9841595510

 

Previous Post
Next Post

Leave a comment