astrology dinamani
ஆடி மாத பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?
2017/08/07

ஆடி மாத பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகளாவர். இந்த எழுவரும் சிவனிடமிருந்து சில யோகாபயிற்சிகளை கற்றனர். அந்தப் பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து 84 ஆண்டுகள் செய்து வந்தனர். இருப்பினும் சிவபெருமான் அவர்களைப் பார்க்கவும் இல்லை அவர்களிடம் பேசவும் இல்லை. எனினும் ரிஷிகள் தங்கள் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவபெருமான் மனமிறங்கி அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்க ஆயத்தமானார்.

தக்ஷினாயன்ய காலம் என்பது சூரியன் தெற்கு நோக்கி தன்னுடைய பயணத்தைத் தொடங்கும் காலம். எதையும் உள்வாங்கிக்கொள்ளச் சிறந்த காலம். அதற்கு ஏற்றார் போல் சிவபெருமான் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று தெற்கு நோக்கி அமர்ந்து சப்த ரிஷிகளுக்கு ஒரு குருவாக போதனைகளை வழங்கிய காலம்.

சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்தப் பௌர்ணமி ‘குரு பௌர்ணமி” என்றும், தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் ‘தட்சிணாமூர்த்தி” என்றும் அழைக்கப்படலானார்.

வியாச பௌர்ணமி
வேதங்களைச் சாமானியர்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ள அதன் அர்த்தங்களை விளக்கமாக எடுத்துச் சொல்பவரை ‘வியாசர்’ என்று கூறுவர். அதனால் வடநாட்டில் ஆடி மாதப் பௌர்ணமியை குரு பூர்ணிமா என்றும், வியாச பௌர்ணமி என்றும் கொண்டாடப்படுவது வழக்கம்.

பௌர்ணமி விரதம்
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோயில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர். மாலையில் கோயில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

ஆடி பௌர்ணமி சிறப்பு
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபடக் குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். பொதுவாகப் பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

Previous Post
Next Post

Leave a comment