ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் – 2017 : ரிஷபம்

rishabamஇந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த விரக்தி மனப்பான்மை விலகி விடும். மனதிலிருந்த கலக்கங்கள் மறைந்து தெளிவு குடிகொள்ளும். மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுவீர்கள். ஒரே இடத்தில் உழன்று கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக பல இடங்களுக்கும் பயணப்பட்டு தொழிலை மேம்படுத்துவார்கள். எதிர்பாராத வாய்ப்புகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்கள் விலகிவிடுவர். பணவரவில் தடைகளோ பொருளாதாரத்தில் கஷ்டங்களோ ஏற்படாது. நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அதிகார பதவிகளில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களை முடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பாகப்பிரிவினை தாமதமாகும். உடன்பிறந்தோரும் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். புதிய மாற்றங்கள் மனதிற்கு வருத்தமளிக்கும். உடலில் சிறு சோம்பல் குடிகொள்ளும். மந்தமாக காணப்படுவீர்கள். எவருக்கும் வாக்குக் கொடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொடுக்கவும். அனைத்து மாற்றங்களிலும் ஓர் அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்பு புதைந்திருக்கும். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய இடங்களுக்கும் மாற்றலாகிச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். காரணம் புரியாமல் மனதில் ஒரு கலக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் பளு குறைந்து காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சில சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கமிஷன் ஏஜன்ஸி துறைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வாராக் கடன் என்று நினைத்திருந்தவைகளும் வசூலாகும் ஆண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாகும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு திருப்திகரமான ஆண்டாகும். உங்களின் சுயஜாதகம் பலம் பெற்று இருக்கும்பட்சத்தில் எட்டாக் கனியாக இருக்கும் அமைச்சர் போன்ற பதவிகள் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த புகழ், பணவரவுண்டு. ரசிகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவு குறையும். அவ்வப்போது தலைகாட்டிய பிரச்னை ஒன்று முழுமையாகத் தீர்ந்துவிடும். கணவரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மாணவமணிகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முதலிடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post