astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – கும்பம்
2014/12/29

kumbam (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்பட துவங்கும். நெடுநாளாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உபாதைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். செய்தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. போட்டியாளர்கள் மறைமுகமாக தொல்லை கொடுத்து வருவார்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் கடினமான பேச்சுக்களால் வருத்தமடைவீர்கள். இருப்பினும் பெரிதுபடுத்தமாட்டீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொறாமையுடனும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்களைச் செய்வீர்கள். புகழ், கௌரவம் இவற்றை எதிர்பார்க்காமல் கடமையே என்கிற ரீதியில் உழைப்பீர்கள். அறிமுகமில்லாதவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ளக் கூடாது. மாறுபட்ட யோசனைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். முக்கிய விழாக்களில் மட்டுமே கலந்துகொள்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் தவிர்த்துவிடுவீர்கள். அரசு அதிகாரிகளுடனும் அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீகச்சொத்து விஷயங்களில் உங்கள் பங்கு தானாக வந்துசேரும். சிலருக்கு புதிய வீட்டிற்கு குடிசெல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சிறப்பான எதிர்காலத்திற்காக அஸ்திவாரம் அமைத்துக்கொள்வீர்கள். சிறிய அளவு முயற்சியிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்ற அசையா அசையும் சொத்துகளை வாங்க முயற்சி செய்வீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. நண்பர்களின் உதவி கிடைக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் இல்லாதோருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆளுமைத்திறன் கூடும். அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் நிறையும். சட்டப் பிரச்னைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலை கட்டாயமாக விரிவுபடுத்தும் சூழ்நிலை உருவாகும். மனதிற்கினிய பயணங்களைச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு அதிகமாக உழைக்கவேண்டி வரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். அலைச்சலுக்குப் பயந்து வேலைகளைத் தட்டிக் கழித்தால் வீண் பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணவரவுக்கு ஏந்த குறையும் வராது. வியாபாரிகளுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். வியாபாரம் அபிவிருத்தியடையும். கூட்டுத்தொழில் செய்யவும் வாய்ப்புண்டாகும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்பு அந்தஸ்து அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அக்கறை காட்டவும். பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்வார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவார்கள். கால்நடைகள் மூலமும் நல்ல பலனை அடைவார்கள். சக விவசாயிகளும் உதவிகரமாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவார்கள். அதனால் பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பதவிகளும் கிடைக்கும். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத் துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். புகழைத் தக்கவைத்துக்கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்களை தைரியமாக எடுத்து சிறப்பாக செய்து சாதனைகளாக மாற்றிவிடுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமைகளும் உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் ஏற்படாது. மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கல்வியில் நிலவும் மந்தமான நிலையை போக்க கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும். படித்த பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்கவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post