astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – விருச்சிகம்
2014/12/29

viruchikam(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும். உங்கள் காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே முடிவடையும். உங்களை ஒதுக்கிவைத்தவர்கள் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாகப் பேசி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். “கொக்குக்கு ஒன்றே மதி” என்கிற ரீதியில் செயல்களில் கவனம் சிதறாமல் செயல்படுவீர்கள். வெளியிடங்களில் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நெடுநாளாக வாட்டி வதைத்துக்கொண்டிருந்த வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிடும். வருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். மிகவும் நலிந்தவர்களுக்கு பணஉதவி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாட்டையும் இந்த காலகட்டத்தில் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உற்றார் உறவினர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவர்களிடம் கூடிய வரை வீண் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்த்து நேசத்துடன் பழகவும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பைக் கூட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எதிலும் வேகத்தைக் குறைத்துக்கொள்வதோடு விவேகத்தையும் கூட்டிக்கொண்டு செயல்பட்டால் தோல்விகளையும் தவிர்த்து வெற்றிகளைக் காணலாம். சிலருக்கு குடும்பத்தில் சற்று கூடுதலான அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கண், வயிறு போன்றவற்றில் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். சமயோசித புத்தியால் எதிர்வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திலும் சுபச் செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் செயல்களை தகுந்த முறையில் திட்டமிட்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். வீடு மனை போன்ற ஸ்திர சொத்துக்களை வாங்குவதையும் தள்ளிவைக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க முயற்சி செய்யவும். மேலதிகாரிகளின் வெறுப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பீர்கள். பிரச்னைகளும் தடைகளும் வராமல் இருக்க சற்று ஒதுங்கியே இருக்கவும். பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களை பெரிதாக நம்ப வேண்டாம். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரம் செய்வர். எந்த முடிவுகளையும் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பின்னரே எடுக்கவும். வெற்றிகள் தாமதமாக வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்களைச் செயல்படுத்துங்கள். விவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் காலதாமதம் ஏற்படும். இதனால் சில இடையூறுகளும் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. கலைத்துறையினரின் பெயரும் புகழும் அதிகரிக்கும். நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கவும். புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். பல நாள்களாக வராமலிருந்த தொகை தற்போது கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்ப விஷயங்களில் யோசித்து நடந்துகொள்ளவும். பிறருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை பெறுவர். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக பாணியாற்றுவீர்கள். விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post