ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – துலாம்

thulam (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இதனால் பகைமை பாராட்டுபவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல் கூடும். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். கடின உழைப்பை மேற்கொண்டாலும் தேவையான ஓய்வெடுத்துக்கொள்வீர்கள். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கும் உயரும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். உடன்பிறந்தோர் கோபப்பட்டாலும் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றல் உண்டாகும். சிறிது சிரமங்களுக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கென தனியான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்து உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் மனத் தைரியமும் உறுதியான சிந்தனைகளும் உருவாகும். உங்கள் முயற்சிகளில் பங்குகொள்ள பலர் முன்வருவார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் பணிவாக நடந்துகொள்வார்கள். உடல் நலமும் மேன்மையாகவே இருக்கும். யோகா பிரணாயாமம் போன்றவற்றையும் கற்றுக்கொள்வீர்கள். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். களவுபோயிருந்த பொருள்களும் திரும்பக் கிடைக்கும். தீயவர்களின் சகவாசத்தை விலக்கிவிடுவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். தாழ்வுமனப்பான்மையை தவிர்த்துவிடுங்கள். எவருடனும் வீண் விவாதமோ, வாக்குவாதமோ வேண்டாம். எவருக்கும் இந்த காலகட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். அதோடு உங்கள் பெயரிலும் பணம் வாங்கிக் கொடுக்கக்கூடாது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க சற்று அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால், வேலைப்பளு சற்று குறையும். கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும். இந்த ஆண்டு இடமாற்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பணப் பிரச்னையும் மனக்கஷ்டமும் அடைவார்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வெளியிலிருந்து வரக்கூடிய பணம் விஷயமாக சற்று சிரமம் இருக்கும். கடன் வாங்காமல் தொழிலில் சிக்கனம் கடைப்பிடிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது. கால்நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு. சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கத் தாமதமாகும். அதனால் யாரையும் நம்பி எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை மற்றவர்கள் செய்யும்போதும் கவனமுடன் இருங்கள். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் தொடர்ந்து கடினமாக உழைக்கவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் திருமணம், வேலை, குழந்தைப்பேறு என்று எல்லா நிலைகளிலும் சிறிது காலம் சிரமத்தைக் காண்பார்கள். பேசும்போது சுமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீண்பழி மற்றும் கெட்ட பெயர் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும். எந்த பாடத்தையும் பலமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post