astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – மிதுனம்
2014/12/29

mithunam (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல்நலம் சீராகத் தொடங்கும். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்வீர்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். விருந்து கேளிக்கைகளிலும் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலை திறம்பட நடத்துவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவார்கள். சிலருக்கு வசதியான வீட்டுக்கு மாறும் யோகமும் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். குழந்தைகளையும் அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கடனில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடவும். மனதில் இருந்த சோர்வுகள் அகலும். அறிவுப்பூர்வமான விஷயங்களில் விழிப்புணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் கூடும். பணவரவுக்கு தடை வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நெடுநாளாகத் தள்ளிப்போட்டிருந்த குலதெய்வ வழிபாட்டினை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் சட்ட திட்டங்களை உருவாக்கி அதன்படி நடப்பீர்கள். புதிய வீடு வாங்கும் யோகத்தையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமை உண்டாகும். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்கிற ரீதியில் பழமொழியை மனதில் வைத்துக் கொண்டு சக பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய ஆண்டாகும். அவ்வப்போது மேலதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். கொடுக்கப்பட்ட வேலைகளை கவனமாகச் செய்து வந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் மனச்சுமையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குத் தகுந்த பலனைப் பெற முடியாது. கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து வரவுகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகள் மன சஞ்சலத்துடன் செயலாற்றுவீர்கள். கட்சி மேலிடத்தின் அவநம்பிக்கைக்கு ஆளாகி சிறிய தண்டனைகளையும் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு சற்று குறைய வாய்ப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் நிதானமான வளர்ச்சி அடைவார்கள். வருமானமும் படிப்படியாகத்தான் கூடும். நன்கு பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ஏனென்றால் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். எச்சரிக்கைத் தேவை. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இராது. வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் அதிக சிரத்தை  எடுத்து படித்தால்தான் வெற்றியடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தேவையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.

 

Previous Post
Next Post