ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – மேஷம்

meshamஇந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். யூகசக்தி பரிமளிக்கும். மற்றவர்களின் எண்ணங்களை முகத்தைப் பார்த்தே புரிந்துகொள்வீர்கள். உற்றார் உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் செயல்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகளை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை எவர் வழங்கினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறி மகிழ்ச்சி குடிகொள்ளும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவார்கள். ரகசியங்களை எச்சரிக்கையுடன் இருந்து அடுத்தவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணத்தை வசூலிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் வரத் தாமதமாகும். செயல்களில் வேகத்தைக் குறைத்துக்கொண்டு விவேகத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். பங்கு சந்தைகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். செய்தொழிலில் இருந்த சறுக்கல்கள் விலகி படிப்படியாக உயர்வைக் காண்பீர்கள். வருமானத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் தானாகவே விலகிவிடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளும் தானாகவே ஓய்ந்துவிடும். நடக்காது என்று நினைத்திருந்த செயல்கள் திடீரென்று நடந்தேறும். உற்றார் உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நடையிலும் ஒரு புதிய மிடுக்கு உண்டாகும். தொட்டது துலங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளின் அபரிமிதமான பாராட்டு மழையில் நனைவார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகமாகும். அரசு ஊழியர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் வகையில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். வியாபாரத்தில் போட்டியிருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வருமானம் சிறப்பாக இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். லாபத்தைச் சேர்த்து வருங்காலம் வளமாக அமைவதற்கு அடித்தளம் போடுவீர்கள். கால்நடை கோழி முட்டை வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும்.

அரசியல்வாதிகள் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய பதவியில் அமர்ந்து சமுதாயத்திற்கு தொண்டாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வருமானமும் படிப்படியாக உயரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தாய்வீட்டுச் சீதனம், பூர்வீகச் சொத்து ஆகியவை கிடைக்க வாய்ப்புண்டு. மாணவமணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக அமைகிறது. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது.

Previous Post
Next Post