astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – மீனம்
2014/12/29

meenam (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைவரும் உங்களை விரும்புவர். பேச்சில் இனிமை கூடும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி வெற்றியடையும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் உருவாகும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தி கை கொடுக்கும். ஓடி ஆடி வேலை செய்தவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வேலை பார்க்கும் நிலைமை உருவாகும். கடினமாக உழைத்தாலும் தேக ஆரோக்கியத்தில் எந்தக் குறைவும் உண்டாகாது. மதியூகி என்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அவசியமில்லாத விஷயங்களில் தலையை நுழைக்கமாட்டீர்கள். நல்லது கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து தீயவற்ற ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடுவீர்கள். புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பழைய காலத்தில் காணாமல் போன பொருள்கள் இந்த காலகட்டத்தில் திரும்பக் கிடைக்கும் என்றால் மிகையாகாது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறிது உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைத்து விஷயங்களையும் பொறுமையுடன் அணுகவும். புதிய முயற்சிகளை அவசரப்பட்டு செயல்படுத்த வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டமிது. சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும். சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய விஷயங்களுக்காக கடன்கள் வாங்க நேரிடும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் நம்பிக்கை துரோகம் செய்வார்கள். அதனால் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நேர்முக மறைமுக போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிக்கவும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் இருக்கும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சையும் நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் சுபச் செலவுகள் உண்டாகும். தொலைதூர புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தானாகத் தேடிவரும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து சென்று வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்கியமும் கிட்டும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் பலனளிக்கும். சக ஊழியர்களின் நட்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராக இருக்கும். கஷ்டகாலத்தில் பழைய சேமிப்புகள் கைகொடுக்கும். நண்பர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருந்து செயலாற்றவும். வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்யும் நிலைமை சிலருக்கு ஏற்படலாம். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். வெகுநாள்களாக தள்ளிப்போட்டிருந்த வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். தொழிலில் தன்னம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் ஈடுபட்டு திறமைகளை வெளிக்கொணர்வீர்கள். ரசிகர்களின் ஆதரவுண்டு. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே கவனம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். முதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளில் வெற்றிபெற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு உகந்தது.

 

Previous Post
Next Post