astrology dinamani
அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தது ஏன்?
2019/01/11

அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தது ஏன்?

ராம தூதரான ஆஞ்சநேயருக்குப் பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் எனப் பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். ராமாயணக் காவியத்தின் முக்கிய கதாப்பாத்திரமே அவர்தானே.

சில கோயில்களில் அனுமார்  பஞ்சமுகத்துடனும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர்  பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே.

உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் தன்னுடைய சகோதரனான அகிராவணனிடம் இதைப் பற்றி கூறினான். தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்திச்சென்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று சகோதரனுக்கு வாக்களித்தான்.

ஆனால் வீரமும் விவேகமும் நிறைந்த அனுமாரை மீறி அகிராவணனால் இராமனையும் லக்ஷ்மணனையும் கடத்த முடியவில்லை. அதனால் தந்திரத்தைக் கையாண்டார்.

விபீஷணன் உருவத்திற்கு மாறினான் அகிராவணன். இராமனையும் லக்ஷ்மணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்குத் தூக்கி சென்றான். சற்று தாமதமாக விபீஷணன் மூலம் விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி இராமனைக் கடத்தி சென்றதினாலும் கடும் கோபமடைந்தார். அகிராவணனைக் கொன்று ராமனை மீட்பேன் என வானரப்படைகளுடன் பாதாளம் நோக்கிப் புறப்பட்டார்.

பாதாள உலகின் வாயிற்காப்பானாக மகரத்வஜன் பொறுப்பேற்றிருந்தான். அனுமானை வணங்கிய மகரத்வஜன், அனுமானை ‘நான் அகிராவணனின் சேவகன். வீர அனுமானின் புத்திரன். தாங்கள் யார்?’ என்றான். தனக்குத் திருமணமே ஆகவில்லையே. புத்திரன் எப்படி இருக்க முடியும்? எனக் குழம்பினார், அனுமன். ஆனால் மகரத்வஜனின் ஆணித்தரமான பதிலால் எப்படி சாத்தியம் என்பதைத் தியான திருஷ்டியில் அறிந்து கொண்டார்.

(இராவணனால் அனுமானின் வாலில் மூட்டப்பட்ட தீயானது இலங்கையையே தீக்கரையாக்கியது. அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாத அனுமார் ஒரு பெரிய நீர் நிலையில் மூழ்கி உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டார். அப்பொழுது உஷ்ணத்தால் வெளிவந்த உயிரணு, ‘மகர்’ என்னும் பெண் மச்சத்தின் உடலுக்குள் சென்றது. மகர் கருவுற்று ஒரு புத்திரனை ஈன்றது. அவனே மகரத்வஜன்.

தன் மகன் என்பது உண்மைதான் என்று அறிந்து கொண்ட அனுமன் தான் மகரத்வஜனின் தந்தையாகிய அந்த அனுமன் என்பதைக் கூறி நடந்த விபரங்களை எடுத்துரைத்து பாதாள அரண்மனைக்கு வழிவிடுமாறு கூறினார். ‘நீங்கள் என் தந்தையானாலும் என்னால் உங்களை அனுமதிக்க முடியாது. ஒன்று என்னுடன் போர்

செய்யுங்கள் அல்லது திரும்பி செல்லுங்கள்’ என்றான்! வேறு வழியின்றி தந்தையும் மகனும் போரிட்டினர். மிகத் தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானரப் படை பயந்தது.அனுமன் தன் பலத்தைப் பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார். அனுமன் தனியாகப் பாதாள அரண்மனையின் உள்ளே சென்றார்.

அகிராவணனைக்  கண்டதும் கோபத்தில் பலவாறு தாக்க முற்பட்டார். எவ்வளவு முயற்சித்தும் மாயைகளை உடைத்து அகிராவணனை வெற்றி  கொள்ள முடியவில்லை. அகிராவணது சக்தியை உடைக்க ஒரே வழி ஐந்து திசைகளில் உள்ள வெவ்வேறான விளக்குகளை ஒரே நேரத்தில் அணைப்பது மட்டுமே என்று அறிந்து கொண்டார். அச்சமயமே அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக (அனுமன், நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன்) உருவெடுத்து ஐந்து திசைகளில் உள்ள விளக்குகளை ஒரே சமயத்தில்  அணைத்தார்.

அடுத்த கணமே அகிராவணனின் மாயசக்தி குறைந்தது, ஒரே  வீச்சில் அவன் உயிர் பறித்தார் ஆஞ்சநேயர். இராமனையும் லக்ஷ்மணனையும் மீட்டு விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். ராம பக்தன் என்பதையும் நிரூபணம் செய்தார்.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்குப் பல இடங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மந்திராலயம் சமீபத்தில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் விசேஷமாக்க கருதப்படுகிறது. காரணம் என்ன? ஸ்ரீ ராகேந்திரர் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்தார். அப்பொழுது  ஸ்ரீ ஹனுமானின் பஞ்ச முகம், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வராகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி , ஸ்ரீ கருட வாகனத்துடன் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு இந்தத் தலத்தில் காட்சி கொடுத்ததாக்க கூறப்படுகிறது. இதற்குப்பிறகே ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்தார் எனக் கூறப்படுகிறது.

ஆஞ்சநேயர் பஞ்சமுகி என்னும் இடத்தில் ஒரு பாறையின் மேல் சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்டதால் பஞ்சமுகி என்பதே இத்தலத்திற்குப் பெயரானது. கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம், தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர், மேற்கு நோக்கி இருப்பது கருடர், வடக்கு நோக்கி இருப்பது வராஹர், உச்சியில் இருப்பது ஹயக்ரீவர். இம்முகங்கள் நமக்கு அறியப்படுத்துவன என்ன? ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். இறைவன் நாமாவளி சொல்வது, இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது, இறைவனைக் கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது, இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது. பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளைத் தான் குறிக்கிறது.

ஹனுமத் ஜெயந்தி அன்று ஸ்ரீ அனுமான் சலீஸா படிப்பது மிகவும் மேன்மையைத் தரும். பல மடங்கு பலனைத்தரும். வேண்டிய சௌபாக்கியத்தினைத் தரும்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

– மாலதி சந்திரசேகரன்

Previous Post
Next Post

Leave a comment