astro_dinamani

சனிப் பெயர்ச்சி பலன்கள்

mesham rishabam mithunamkatakam

simham kannithulam viruchikam

dhanusu makaram kumbam meenam

சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

பொதுவாகவே குரு, சனி பகவான்களின் பெயர்ச்சிகள் அனைவரின் மனதிலும் ஓர் ஆச்சரியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக சனி பகவானின் பெயர்ச்சியால் நம் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சனிபகவான் ஜோதிட கிரந்தங்களில் நீதிமான் என்று வருணிக்கப்படுகிறார். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு கொடுக்க வேண்டியதை அது நல்லதோ அல்லது கெட்டதோ அவைகளை அனா பைசா வித்தியாசம் இல்லாமல் நமக்கு கொடுத்து விடுவார்.

சனிபகவான் கடினமான பாதையில் நம்மை நடக்க வைப்பார். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே அதுபோல் அசௌகரியமான சூழ்நிலைகளில் நாம் வாழ கற்றுக் கொடுப்பார்.

தடைகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகே மனிதன் மனிதனாகிறான் என்பதால் பண்பட்ட மனிதர்களை உருவாக்குபவர் சனி பகவானாவார். மேலும் நம்மைப் போலவே மற்றவர்களையும் நினைக்க வேண்டும் என்பதையும் நமக்கு அனுபவ பாடமாகக் கற்பிப்பவர் சனி பகவானாவார் என்றால் மிகையாகாது.

ஏழரை ஆண்டு சனி பகவானின் சஞ்சாரம்:
சனி பகவான் ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரெண்டாம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது விரய சனிகாலம் என்றும், ஜன்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜன்ம சனி என்றும் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.

நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஷ்டம சனி என்றும் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் வழங்கப்படுகிறது.

இதுவரை, சனிபகவான் சஞ்சரித்து வந்த விருச்சிகராசி அவரின் பகை வீடாகும். இனி சஞ்சரிக்கப்போகும் தனுசு ராசிக்குரிய குருபகவான் சனிபகவானுக்கு சமம் என்கிற அந்தஸ்தில் இருப்பதால் இங்கு, அவர் மகிழ்ச்சியோடு சஞ்சரிப்பார். இதனால் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச்சனி நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மகர ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்கு ஜென்ம சனியும் கன்னி ராசிக்கு  அர்த்தாஷ்டம சனியும் நடக்கும். துலா ராசிக்கு ஏழரை சனி முடிவடைகிறது. துலா ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கடக ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கும்ப ராசிக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். அதாவது 3,6,11 ஆம் வீடுகளில் சனிபகவான் சஞ்சரித்தால் மிகவும் நன்மை உண்டாகும் என்பது ஜோதிட விதி. சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்து 12 ராசிகளையும் (அதாவது சூரியபகவானைச் சுற்றிவர) சராசரியாக 29 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவர் மெதுவாக, சஞ்சரிப்பதால் சனைச்சரன் என்று பெயர் பெற்றார். பொதுவாக,  சனிபகவானின் சஞ்சாரத்தினால் சிறிது கஷ்டங்களும் சஞ்சலங்களும் குழப்பங்களும் மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவரின் வாழ்க்கையில் இந்த ஏழரை சனி சஞ்சாரம் மூன்று முறை வர வாய்ப்புள்ளது. முதல் ஏழரை சனி சஞ்சாரத்தை அல்லது முதல் சுற்றை மரண சனி என்றும் கூறுவார்கள். ஏழரை சனியில் பொதுவாக, மரணம் ஏற்படுவது இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சனிபகவான் நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு உரிய பலாபலன்களை நமக்கு அணா பைசா வித்தியாசம் இல்லாமல் பெற்றுத் தருகிறார். தங்கத்தை இரும்புச் சம்மட்டியால் அடித்து அடித்துத்தான் ஆபரணமாக ஆக்குவார்கள். அதுபோன்று நமக்கு கஷ்டங்கள் என்கிற அடியை கொடுத்து நம்மைத் திருத்தி சமுதாயத்திற்கு பயன்படும் ஆபரணம் போல் மாற்றுபவர் சனிபகவான் என்றால் மிகையாகாது. உளி தாங்கும் கற்கள் தானே பின்பு அழகான சிலைகளாக மாறுகின்றன! விதி என்பது மதிக்கு (அறிவுக்கு) புலப்படாதது. விதியானது மதியைக் கூடத் தன் வசமாக்கிக்கொண்டு இயங்கும் தன்மையுடையது. இத்தகைய விதிக்கு காரகராக சனிபகவான் அமைந்திருக்கிறார். ஒரு மரத்திற்கு வேர் எப்படி முக்கியமோ அதைப்போன்று மனித வாழ்வுக்கு விதி என்பது முக்கியமானது. ஒரு மரத்தின் வேரை மாற்றி வேறு மரமாக எப்படி மாற்ற  முடியாதோ! அப்படி ஒருவர் பிறந்த மூலாதார நவக்கிரக சக்தியை மாற்ற முடியாது. இது மருத்துவத்தில் டி.என்.ஏ. என்பதற்கொப்பானது.

” நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு’ என்பது வழக்கு. நம்பக் கூடியது எது, நம்பக் கூடாதது எது என்பதை நமக்கு சனிபகவானின் சஞ்சாரம் சரியாக உணர்ந்திவிடும். சத்தியத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து இவைகள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொண்டால் சனிபகவானின் அருள் நமக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும் கிடைக்கும். அதாவது, ஒரு மரக்கட்டையை இழுத்துச் செல்ல வேண்டியது விதியென்றும்; சத்தியத்தையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த மரக்கட்டையை ஒரு நீர் பரப்பின் மீது போட்டு விட்டு இழுத்துச் சென்றால் எப்படி பாரம் தெரியாமல் இருக்குமோ அப்படி சனிபகவான் அருள்புரிவார் என்றால் மிகையாகாது. புறனாறுப் பாடலில் ” பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தலும் இலமே’ என்கிற வரி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது தத்துவத்தின் சாறை நாம் பருக வாய்ப்பளிப்பார்.  நம் மனம் தத்துவ நெறி வழி செல்லும்படி ஆக்கிவிடுவார்.

சச மஹா யோகம்:
இது சனி பகவானால் ஏற்படும் பஞ்ச (ஐந்து) மஹா (சிறந்த) புருஷ யோகங்களில் ஒன்றாகும். சனி பகவான் இருக்குமிடம் ஆட்சி உச்ச வீடுகளாக அமைந்து, அதாவது துலாம், கும்பம் மற்றும் துலாம் ராசிகளாக அமைந்து, அந்த ராசிகள் லக்னத்திலிருந்தோ அல்லது ராசியிலிருந்தோ அதாவது சந்திர பகவான் இருக்கும் இடத்திலிருந்து கேந்திர ராசிகளாக அதாவது, 1,4,7,10 ராசிகளாக அமையுமானால் சனி பகவானால் உன்னதமான பலன்கள் உண்டாகும்.

சச யோகத்திற்கு ஜாதகர் உரியவராகிறார். இந்த யோகத்தினால் எல்லா தரப்பட்ட மக்களாலும் பெரிதும் போற்றப் படுபவராக இருப்பார். நல்ல அறிவும் சுறுசுறுப்பும் உதவும் மனப்பான்மையும் கொண்ட வேலைக்காரர்கள் அமைவார்கள். ஒரு கிராமத்திற்குத் தலைவனாகவோ, மந்திரியாகவோ ஆளுநர் போன்ற பதவிகளில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். இந்த யோகத்தால் புகழும் பெருமையும் உண்டாகும்.

கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை:
சனி பகவான் அனுகூலமற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் கடினப் பலன்கள் சற்று கூடுதலாக நடக்கும். நமக்குக் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி தங்கத்தை சம்மட்டியால் அடித்து ஆபரணமாக ஆக்குகிறார்களோ, அதுபோல் நம்மை சிரமங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய வகையில் மாற்றுகிறார். அதேநேரம் அந்த அனுகூலமற்ற ராசியை விட்டுப் பெயர்ச்சி ஆகும் காலத்தில் துன்பம் கொடுத்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுப்பார். இதனால்தான் சனி பகவானைப் போல் கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை; என்றும் “அவருக்கு நிகர் அவரே’ என்றும் வழங்கி வருகிறது.

சனி மேடு:
உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.

சனி பகவானின் குணம்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் சுய ஆதிக்கம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.

சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.

நீடித்த ஆயுள்:
லக்னத்தில் சனி பகவான் இருந்தாலும், லக்னத்தை சனி பகவான் பார்வை செய்தாலும், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தாலும் அந்த எட்டாமிடத்தைச் சனிபகவான் பார்வை செய்தாலும் நீடித்த ஆயுள் ஏற்படும். மேலும் சனி பகவானுடன் குரு பகவான் இணைந்திருந்தாலோ அல்லது குரு பகவானின் பார்வையைப் பெற்றாலோ, சனி பகவான் 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் (உப ஜெயம் என்றால் வெற்றிக்குத் துணை நிற்பது என்று பொருள். உப ஜெய ஸ்தானங்களிலிருந்து வழக்கில் வெற்றி, கடன் அடைபடுதல், நோய் குணமடைதல், தொழிலில் பன் மடங்கு லாபம், நிலையான சொந்தத் தொழில், வாகன யோகம் போன்றவை குறித்து அறியலாம்) இருந்தாலோ, சனி பகவான் ஆட்சி(மகர ராசி) உச்சம்(துலாம் ராசி) மூலத் திரிகோணம் (கும்ப ராசி) ஆகிய ராசிகளில் இருந்தாலோ, சுபர் சாரம் பெற்றிருந்தாலோ நீடித்த ஆயுள் உண்டாகும்.

பித்ரு தோஷம்:
ஜாதகங்களில் சனி பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, பார்க்கப்பட்டிருந்தாலோ, சூரிய பகவானுடன் சர்பக் கிரகங்களான ராகு, கேது பகவான்கள் இணைந்திருந்தாலோ பித்ரு தோஷம் உள்ளது என்று கொள்ள வேண்டும். இதற்கு இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று உத்திராயண புண்ணிய காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) தில ஹோமம் செய்து விட்டு வர வேண்டும். இதற்குப் பிறகு சனிக் கிழமைகளில் சனி பகவானையும், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட பித்ரு தோஷம் மறையத் தொடங்கும். மேலும் “”பிரேத சம்ஸ்காரம்” என்ற இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும். குறிப்பாக அனாதைப் பிணங்களை எரிக்க உடலாலோ, பணத்தாலோ உதவி செய்பவர்கள் சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

சனி பகவானின் வழிபாட்டுத் தலங்கள்:
சனி பகவானுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள் பல இருந்தாலும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது திருநள்ளாறு தலம். அடுத்ததாக தேனி மாவட்டத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குச்சனூர் சனி பகவான். ஓமாம்புலியூர் சனிபகவான் (ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருக்கொள்ளிக்காடு சனி பகவான் (திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருவானைக்காவல் சனி பகவான் (சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), சோழவந்தான் சனி பகவான் (விசாக நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருப்பரங்குன்றம் சனி பகவான் (ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), திருச்செங்கோடு சனி பகவான் (சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது), கொடுமுடி சனிபகவான் (அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உகந்தது) ஆகியவையும் சனி பகவானின் அருளைத் தரும் தலங்கள் ஆகும். மேற்குறிப்பிட்ட தலங்களில் ஒன்றுக்காவது சென்று வழிபடுவது நலம் பயக்கும்.

விழுப்பு ஆடையை அணியக் கூடாது:
விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது. அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில் இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும் அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால் சனி தோஷம் இன்னும் பலமாகும். அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை அணியக்கூடாது. “விழுப்பு இருக்குமிடத்தில் வில்வப் பழக்காரி வரமாட்டாள்” என்பது மூதோர் வாக்கு. வில்வப் பழக்காரி என்பது திருமகளைக் குறிக்கும்.

வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் பொருளாதார வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். சென்னை, மயிலையில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில் மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அன்பர்களின் நலனுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.

சனி பகவானுக்கு உகந்த பரிகாரம்:
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது. ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால் மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும். “சனியனே, முண்டமே’ என்று திட்டாமல் இருப்பது அவசியம். இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். மேலும் சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும். நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.

சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம். சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான “நமசிவாய’ என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள் பேசுகின்றன. வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும். குங்குலியப் புகையின் நடுவில் இருந்து கொண்டு ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால் சனி தோஷம் விலகும்.

சனி பிரதோஷம்:
சிவபெருமான் விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. அவர் ஆனந்தத் தாண்டவமாடிய திதி திரயோதசி திதி. இந்த இரண்டும் சேர்ந்து வருவதுதான் சனிமஹா பிரதோஷம். ஒரு சனிப்பிரதோஷ தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை அனுசரிப்பது அர்த்தநாரி பிரதோஷம் என்று புகழப்படுகிறது. இதற்குப் பலன் பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள். மேலும் திருமணத் தடையும் விலகும். தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.

சனிக் கிழமைக்கு வட மொழியில் ஸ்திரவாரம் என்று பெயர். (ஸ்திரம் என்றால் அசையாதது, நிரந்தரம், பலமாக ஊன்றி நிற்பது என்று பொருள்). அதனால்தான் சனி பகவான் வலுப்பெற்று அவர் தசையில் வாங்கும் வீடு, நிலம் ஆகிய சொத்துக்கள் நிரந்தரமாகத் தங்கி வம்சத்தினருக்கும் செல்லும். மேலும் சனி தசையில் வாங்கிய சொத்துக்களை அவ்வளவு எளிதில் சுலபமாக விற்க முடியாது.

ஐஸ்வர்யம் தங்கும்:
வீட்டில் குப்பைத் தொட்டி வைத்திருக்கும் இடத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். வீட்டைப் பெருக்கும்போது குப்பைகளை தென்மேற்கு மூலையில் குவித்து, அங்கிருந்து அள்ளி வெளியில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் இல்லத்தில் ஐஸ்வர்யம் தங்கும்.

சனியின் ஆதிக்கம்:
ஒருவர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் அவர் வாழ்க்கையில் செவ்வாய் தசை வர முடியாது. அதேபோல் அனைத்து தசைகளில் பிறந்தால் ஒரு குறிப்பிட்ட தசை வாழ்க்கையில் வராமல் போய்விடும். இதே அடிப்படையில் கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தாலும் சனி பகவானின் ஆதிக்கம் ஏற்படாது என்று கூற முடியாது. ஏனெனில் அனைவரையும் ஏழரை சனி, அர்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய முறையில் ஆதிக்கம் செலுத்துகிறார். இதனால் சனி மஹா தசை வராவிட்டாலும் மேற்கூறியபடி வந்து ஆட்டிப் படைப்பதில் அவருக்கு நிகர் அவரே. புழு, பூச்சி, விலங்கு, மனிதர், தேவர் ஆகிய அனைவரும் சனி பகவானின் ஆளுகைக்கு உட்பட்டவர்களே என்றால் மிகையில்லை.

நெருப்புக்குப் போக வேண்டும்:
“பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்” என்று கூறியுள்ளார்கள். அதாவது பருப்பு என்றால் திருமணத்தில் பரிமாறப்படும் விருந்தைக் குறிக்கும். “”பருப்பில்லாமல் கல்யாணமா?” என்றும் கூறுவார்கள். திருமணத்தைவிட ஒருவரின் சாவுக்குச் செல்வது, பிணத்திற்குக் கடைசி மரியாதை செலுத்துவது முக்கியம். அங்கு சென்றால் ஏதாவது சிறு உதவியாவது செய்ய வாய்ப்பு ஏற்பட்டு சனி பகவானின் அருளினால் நம் பாவங்கள் குறையும்.

சனி பகவான் சில துளிகள்

பெற்றோர்: சூரிய பகவான்/சாயாதேவி

மனைவி-நீலாதேவி

மகன்-குளிகன்

திசை-மேற்கு

ரத்தினம்:

நீலம் (இந்திர நீலம்/ அபராஜிதா நீலம்)

தானியம் -எள்

சமித்து-வன்னி

வாகனம் – காகம்

பெரிய தாய் – உஷா தேவி

பெரிய தாயின் பிள்ளைகள் -வைவச்வதமனு, எமன்,யமுனை

உடன் பிறந்தோர் – சாவர்ணிமனு, தபதி என்கிற பத்தினி

தேர்- இரும்பால் ஆனது. அதில் நீல ஆடை அணிந்த

எட்டு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும்.

கைரேகைகளில் – விதி ரேகை/நடுவிரல்

காரகத்துவம்- ஆயுள்

பார்வை – 3,7,10

வடிவம் – குள்ளம்

சம கிரகம்- குருபகவான் அதிதேவதை/

பிரத்யதி தேவதை – யமன்/பிரஜாபதி

உபகிரகங்கள் – ஒன்பது

குணம் – குரூரம், மந்தநடை

நட்பு கிரகங்கள் –

புதன், சுக்கிரன், ராகு,

கேது பகவான்கள்

பகை கிரகங்கள்-

சூரியன், சந்திரன்,

செவ்வாய் பகவான்கள்

நிறம் – கருப்பு

சனி பகவான் காயத்ரி!

“காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி

தந்னோ மந்தப்ரசோ தயாத்”